முதலூர் - மஸ்கோத் அல்வா

அல்வா சாப்பிடலாம்னு கேட்ட எல்லாரும் திருநெல்வேலி அல்வாவானு கேக்குறாங்க. இல்லங்க திருநெல்வேலில மட்டும் அல்வா பிரபலம் இல்ல. அதுக்கு போட்டியா இன்னொரு இடமும் இருக்குங்க. அதுதான் தூத்துக்குடி மாவட்டத்தில இருக்குற முதலூர். முதலுருனு சொன்னாலே கூட மஸ்கோத் அல்வானு வரும். ஆமாங்க, இப்போ முதலூர் மஸ்கோத் அல்வாவ பற்றிதான் தெரிஞ்சுக்கிட்டு ருசி பார்க்கப்போறோம்.

அல்வா நெய் அல்லது மற்ற எண்ணெய்களில் செய்யப்படும் ஒன்று. ஆனால், இந்த மஸ்கோத் அல்வா முழுக்க முழுக்க எண்ணெய் சேர்க்காமல் தேங்காய் பாலால் தயாரிக்கின்றனர்.இந்த அல்வா செய்ய மிகவும் பொறுமை தேவை... பொறுமையை விட பக்குவமும் தேவை. இந்த அல்வாவில் அதிக வைட்டமின் சத்துகளை கொண்ட முந்தரி பருப்பும் இங்கு அதிகமாக சேர்க்கப்படுகின்றது.

இவ்வளவு பக்குவம் நிறைந்த இந்த மஸ்கோத் அல்வா எப்படி செய்யலாம்..!

தேவையான பொருள்:

 • மைதா : 1/2 கப்
 • தேங்காய் :1
 • சர்க்கரை : 1 1/2 கப்
 • முந்திரி துண்டுகள் : 10

இப்போ இத எப்படி செய்ய போறோம்னு பாக்கலாம்.

 • நீங்கள் அல்வா செய்வதற்கு முந்திய நாள் மைதாவை சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து தண்ணீரில் ஊற விட வேண்டும்.
 • பின்பு அதில் 3 கப் தண்ணீரை கூடுதலாக சேர்த்து பால் பத்திற்கு பிசையவும்.
 • பால் போன்று இருக்கும் மைதா தண்ணீரை வடிகட்டி வேறொரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும்.
 • மறுநாள் வடிகட்டிய பாலின் மேலோடோயை மட்டும் நீக்கிவிட்டு பயன்படுத்தலாம்.
 • தேங்காயை துருவி அதிலிருந்து 3 கப் வரை தண்ணீர் சேர்க்காமல் பாலை எடுத்து வைக்க வேண்டும்.
 • கனமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரைத்துவைத்த தேங்காய்பால், சர்க்கரை, முந்திரி பருப்பு மற்றும் மைதா பாலினையும் சேர்த்து ஒன்றாக கலக்கவும்.
 • தொடர்ந்து கெட்டிப்பதம் வரும் வரை கலக்கிகொண்டே இருக்கவும்.
 • தேங்காய்பாலில் இருக்கும் எண்ணெய் சூட்டில் வெளிவந்து அல்வா வேக சரியான பதத்திற்கு வந்துவிடும்.
 • தற்போது அல்வா சுருண்டு விடும் அப்போது அடுப்பிலிருந்து இறக்கி தட்டில் பரிமாறலாம்.

இப்பொழுது சுவையான மஸ்கோத் அல்வா தயார்.